Thursday, 5 April 2012

ஜில்லுனு ஒரு காதல்... (பகுதி 1)


Toronto University வளாகம் புது பொலிவு பெற்று இருந்தது

விடுமுறை முடிந்து திரும்பிய மாணவர்கள் இரண்டு மாத கால கதையை பிரதாபித்து கொண்டு இருந்தனர்

அப்போது தான் சேர்ந்திருந்த புது மாணவர்கள் கண்களில் கொஞ்சம் கலக்கமும் நிறைய கனவுமாய் வலம் வந்தனர்

அந்த கூட்டத்துல இந்த கதைக்கு சம்மந்தப்பட்ட ரெண்டு பேர் யூனிவர்சிட்டிகுள்ளேயே இருக்கற ஒரு Food Courtல உக்காந்துட்டு என்னமோ பேசிட்டு இருக்காங்க... என்ன பேசறாங்கன்னு கேப்போம் வாங்க...

"சதீஷ் அங்க பாரேன் ஒருத்தன் நம்மளையே பாத்துட்டு இருக்கான்"

"எங்க மீரா?"

"உனக்கு சைடுல நமக்கு அடுத்த டேபிள்ல...சட்டுன்னு திரும்பாத"

"ம்... " என்றவன் மெதுவாய் இயல்பாய் திரும்புவது போல் திரும்பி பார்த்தான்

"என்ன நான் சொன்னது கரெக்டா சதீஷ்?"

"ம்... கரெக்ட் தான்... அவனை இன்னிக்கி ஓரியன்டேசன்ல பாத்தா மாதிரி ஞாபகம்"

"ஓ...நம்ம க்ளாஸ்ஆ?"

"தெரியல...எல்லா மேஜர்க்கும் ஜெனரல் ஓரியன்டேசன் செசன் தானே இங்கெல்லாம்... மே பி நம்ம க்ளாஸ்ஆ இருக்கலாம். எல்லாரும் Self Introduce பண்ணிகிட்டப்ப இவன் தன்னை இட்டாலியன்னு சொன்னதா ஞாபகம்"

"ஓ... நான் கவனிக்கல"

"ஆமா பாத்தனே நீ தூங்கி தூங்கி விழுந்ததை"

"ஏய்... நான் ஒண்ணும் தூங்கல... ஓரியன்டேசன் பைண்டர் படிச்சுட்டு இருந்தேன்"

"நம்பிட்டேம்மா..." என சதீஷ் சிரிக்க

"உனக்கு ரெம்ப கொழுப்புடா ஆனாலும்... ஏய் அவன் மறுபடியும் நம்மளையே பாக்கறான்"

"நம்மளை இல்ல உன்னைனு சொல்லு... அழகா ஒரு பொண்ணு இருந்தா பாக்கத்தானே செய்வாங்க"

"நெஜமாவா சொல்ற... நான் அவ்ளோ அழகா இருக்கேனா?" என மீரா வெட்கப்படுவது போல் நடித்து அழகாய் கேட்க

"Sorry I lied" என குறும்பாய் சிரித்து கொண்டே சதீஷ் கூற

"ஏய்... யு... யு... " என அவனை அடிக்க புத்தகத்தை எடுத்தாள்

"ஒகே ஒகே... சமாதானம் சமாதானம்" என கையில் இருந்த வெள்ளை பேப்பரை காட்டினான்

"சதீஷ்... அந்த பையன் இன்னும் நம்மளையே பாத்துட்டு இருக்கான்"

"பாத்துட்டு போகட்டும் விடு மீரா"

"நேத்து ஒருத்தி பிசாசு மாதிரி ட்ரெஸ் பண்ணிட்டு வந்தானு நான் ஒரு நிமிஷம் முழிச்சு பாத்ததுக்கு starring is bad manners, did your mom not teach it னு ஒரு மணிநேரம் இங்கிலீஷ் லெக்சர் குடுத்தாளே அதை அப்படியே இப்ப இவனுக்கு குடுக்கட்டுமா?"

"வேண்டாம் மீரா... பாவம் அவனுக்கு இங்கிலீஷ் மறந்துடும், பொழச்சு போகட்டும் விடு" என சதீஷ் சிரிக்காமல் சொல்ல

"உன்ன... இரு இரு... நோட்ஸ் வேணும்னு வந்து நிப்பெல்ல அப்ப சொல்றேன் யாருக்கு இங்கிலீஷ் மறக்கும்னு" கோபமாய் முகத்தை வைத்து கொண்டு சொன்னாள் மீரா

"ஒகே ஒகே... சும்மா கிண்டல் தானே...சாரி" என பாவமாய் முகத்தை வைத்து கொண்டு கெஞ்ச அவர்கள் பின்னால் இருந்த அவன் லேசாக புன்னகைத்தான்

"ஏய் ஏய்... அவன் சிரிக்கறான்.. என்னமோ நாம பேசறது ரெம்ப புரிஞ்ச மாதிரி"

"அவன் ஏதோ Magazine வெச்சுருக்கான் பாரு... அதுல ஏதோ படிச்சுட்டு சிரிக்கறான் போல இருக்கு"

"ம்...ஆமாம் கரெக்ட்... அவனும் அவன் மூஞ்சியும்"

"ஏன் அவன் மூஞ்சிகென்ன?"

"இல்ல... அடிக்கற கிரீன் கலர் ஷர்ட்... கண்றாவி... நம்ம ஊர்ல கட்டிட வேலைக்கு வர்றவன் மாதிரி இருக்கான்"

"ஹா ஹா ஹ... நல்ல கம்பாரிசன்"

"ம்... அவன் தலைய பாரேன் என்னமோ எலி கரண்டி வெச்ச தேங்கா மாதிரி"

"சான்சே இல்ல மீரா... நல்லா சிரிக்க வெக்கற... பேசாம நீ அசத்த போவது யாரு ப்ரோக்ராம்க்கு போலாம்"

"நக்கல் தான் உனக்கு"

"எஸ் எஸ்"

"அவன் பேரு என்ன சொன்ன?"

"நான் எப்ப சொன்னேன்?"

"காலைல ஓரியன்டேசன்ல என்னமோ சொன்னான்னு சொன்னியே"

"இட்டாலியன்னு சொன்னான்... பேரு சொல்லல"

"ஐ சி... அவனோட ஹேர் அது நேச்சுரல் கலர் இல்லைன்னு தோணுது... கலர் பண்ணி இருக்கான்..."

"இல்ல மீரா... இட்டாலியன்ஸ்க்கு Black Hair தான் நம்மள போல... Blonde இல்ல"

"ஓ... அவன் ஷூவ பாரேன்... என்னமோ பார்முலா ஒன் ரேஸ் கார் கூட ஓட போறவன் மாதிரி வில் எல்லாம் வெச்சு.. கண்றாவி"

"ஹா ஹா... " என சிரித்தான் சதீஷ்

"கைல ஒரு புக் கூட இல்ல... இவனெல்லாம் என்ன படிக்க போறானோ"

"ஏய்... இந்த வாரம் முழுக்க ஜஸ்ட் ஓரியன்டேசன் தானே மீரா... நீ தான் நான் சொல்ல சொல்ல கேக்காம நாலு நாளா என்னையும் சேத்து புக் பாக்னு தூக்க வெச்சுருக்க... பொண்ணுங்க எல்லாம் என்னை லூசா நீ ங்கற மாதிரி பாக்கறாங்க"

"அது என்ன பொண்ணுங்க... பசங்க உன் கண்ணுல படலியா"

"பொண்ணுங்க அளவுக்கு படல"

"சரியான ஜொள்ளு பார்ட்டிடா நீ... ச்சே"

"சரியா சொல்லு... no harm ஜொள்ளு பார்ட்டி"

"எப்படியோ போ... அந்த பையன் வெச்சுருக்கற Magazine பாரு... என்னமோ யோகானு போட்டிருக்கு.. சரியான சாமியார் போல இருக்கு"

"மீரா... திஸ் இஸ் டூ மச்... " என அவனும் அடக்க மாட்டாமல் சிரித்தான்

"அவன் கைல பாரேன் ஒரு லிட்டர் பாட்டில் சைஸ்ல காபி கப்... இந்த ஊரு ஜென்மங்க எப்படி தான் இப்படி காப்பிலையே உயிர் வாழுதுங்களோ... எப்படா MBA முடிச்சுட்டு ஊர் போய் சேருவோம்னு இருக்கு"

"அடிப்பாவி நீ தானே அடம் பிடிச்சு இங்க வரணும்னு என்னையும் சேத்து வம்புல மாட்டி விட்ட"

"அப்படியாச்சும் நீ உருபடட்டும்னு தான்"

"நேரம் தான்... சிவனேன்னு செந்தமிழ் நாட்டு தமிழச்சிகளை சைட் அடிச்சுட்டு சந்தோசமா இருந்தவனை இப்படி பனி காட்டுல கொண்டு வந்து தள்ளிட்டீங்க எல்லாரும் சேந்து"

"ஏய்...ரெம்ப டிராமா பண்ணாத சதீஷ்... இந்த ஒரு வாரத்துல யுநிவர்சிட்டில உன் ரவுசு தாங்காம நெறைய பொண்ணுங்க Torontoவ விட்டு போய்ட்டாங்கன்னு கேள்விப்பட்டேன்"

"எல்லாம் நேரம் தான்... பேசு பேசு"

"சரி அதை விடு... சதீஷ் அங்க பாரு அவன் ஐ-போன் வெச்சுட்டு செம அலப்பறை செய்யறான். நம்ம ஊர்ல இதை விட சூப்பர் மாடல் போன் எல்லாம் இருக்குனு இவனுக்கு என்ன தெரியும்... கூமுட்ட"

"என்ன மீரா... ஓவரா லோக்கல் பாஷை எல்லாம் பேச ஆரம்பிச்சுட்ட"

"அப்பப்பா பேசறது தான்... அது சரி... நீ அந்த இத்தாலிகாரன் பத்தி என்ன நெனைக்கற"

"என்ன நெனைக்கிறேன்னா... " என ஏதோ சீரியஸ்யாய் சிந்திப்பவன் போல் பாவனை செய்துவிட்டு "அவன் உன்னை பாக்கறதை விட நீ அவனை அதிகம் பாக்கறேன்னு நினைக்கிறேன்" என சிரித்து கொண்டே சதீஷ் குறும்பாய் கூற

"யு...யு... " என கோபத்தில் கையில் இருந்த புத்தகத்தை அவன் மேல் வீசினாள்

சதீஷ் அதை எதிர்பார்த்தவன் போல் சட்டென குனிய அவள் வீசிய புத்தகம் சதீஷ் பின் அமர்ந்திருந்த அந்த இத்தாலிக்காரன் மேல் போய் விழுந்தது

அவன் தன் கையில் வைத்திருந்த காபி கோப்பை சிதறி அவன் மேல் அபிஷேகம் ஆகியது

மீரா சதீஷ் இருவரும் செய்வதறியாது திகைக்க அவன் இவர்கள் இருவரையும் ஒன்றும் பேசாமல் பார்த்தான்

அவன் கண்களில் தெரிவது கோபமா கேலியா என புரியாமல் மீரா தடுமாறினாள்

மீரா தான் முதலில் சுதாரித்து "Sorry... I'm extremely sorry..." என கூற

"அதையும் தமிழ்லயே சொல்லி இருக்கலாமே... எனக்கு புரியாம இருந்திருக்குமல்ல" என அழகு தமிழில் அவன் பேச

இயல்பிலேயே பெரிய கண்களை உடைய மீரா இப்போது அதிர்ச்சியில் இன்னும் கண்கள் விரிய கருவிழிப்பாவை தெறித்து வெளியே விழுந்து விடுமோ என எண்ணும் படி விழித்தாள்

சூழ்நிலை மறந்து அவளது அழகிய மருண்ட விழிகளை கண்ணிமைக்காமல் ரசித்தான் அவன்

இனி...


(ஜில்லுனு தொடரும்...)

No comments:

Post a Comment